சீனாவில் குடியிருப்பு கட்டிடத்தில் கோர தீ விபத்து... 5 பேர் உயிரிழப்பு!

 

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரில் உள்ள யான்பெங் மாவட்டத்தைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில், இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், இதில் காயமடைந்த 2 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தெளிவான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. இது குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.