சீனச் செயலியால் புது ஆபத்து... நடுரோட்டில் இ-ரிக்ஷாக்கள் முடங்குவதால் ஓட்டுநர்கள் கடும் அதிர்ச்சி!
நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் நூற்றுக்கணக்கான இ-ரிக்ஷா ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாக ஒரு விசித்திரமான மற்றும் ஆபத்தான தொழில்நுட்பப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். பிஸியான சாலைகளில் ரிக்ஷாக்கள் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போதே, எவ்வித முன்னறிவிப்புமின்றி அவற்றின் மின்சார சப்ளை திடீரென முற்றிலும் துண்டிக்கப்பட்டு ஆங்காங்கே நடுரோட்டில் முடங்கிப் போகின்றன. சில குறும்புக்கார இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவுள்ள நபர்கள் இணைந்து 'பேட்-பிஎம்எஸ்' (BAT-BMS) என்ற சீன மொபைல் செயலியைப் பயன்படுத்தி இந்த விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வருவது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
புதிய மாடல் இ-ரிக்ஷாக்களில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம்-அயன் பேட்டரிகளின் ஆரோக்கியம் மற்றும் வெப்பநிலையைக் கண்காணிப்பதற்காகப் புளூடூத் தொழில்நுட்பத்துடன் கூடிய பேட்டரி மேலாண்மை அமைப்பு (BMS) பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சீன நிறுவனத்தின் செயலியைத் தங்களின் மொபைலில் பதிவிறக்கம் செய்யும் மர்ம நபர்கள், 10 முதல் 15 மீட்டர் சுற்றளவில் செல்லும் இ-ரிக்ஷாக்களின் புளூடூத் சிக்னலை ரகசியமாக இணைக்கின்றனர். பெரும்பாலான பேட்டரிகளில் கடவுச்சொல் (Password) பாதுகாப்பு இல்லாததால், செயலியில் உள்ள ஒரே ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலம் ஓடிக்கொண்டிருக்கும் ரிக்ஷாவின் பேட்டரி மின்சாரத்தை அவர்களால் எளிதாக முடக்க முடிகிறது.
வேடிக்கைக்காகச் செய்யப்படும் இந்தச் செயலால் டெல்லியில் இதுவரை 1,000 க்கும் மேற்பட்ட இ-ரிக்ஷாக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பின்னால் வரும் அதிவேக வாகனங்கள் மோதிப் பயங்கர விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அதிரடியாகச் செயல்பட்டு அந்தச் சர்ச்சைக்குரிய செயலிகளை ஆன்லைன் ஆப் ஸ்டோர்களில் இருந்து முழுமையாக நீக்கியுள்ளது. மேலும், நடுரோட்டில் வாகனங்களை முடக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது என்று எச்சரித்துள்ள டெல்லி போக்குவரத்துத் துறை மற்றும் போலீசார், இந்த மோசடியில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீவிரமாக முற்பட்டுள்ளனர்.