6 விமானத் தளங்களில் ட்ரோன்கள் குவிப்பு - தைவானை அதிர வைக்கும் சீனாவின் 'ஏவுகணை' டிரோன்கள்!
தைவான் நீரிணையை ஒட்டியுள்ள பகுதிகளில் சீனா தனது ராணுவப் பலத்தை அதிரடியாக அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 1960-களில் பயன்படுத்தப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட 'ஷென்யாங் ஜே-6' ரக போர் விமானங்களை, ஆளில்லாத் தாக்குதல் டிரோன்களாக சீனா மாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த மிட்செல் விண்வெளி கல்வி மையம் நடத்திய 'சீனா ஏர்பவர் டிராக்கர்' என்ற ஆய்வில் இந்த விபரங்கள் அம்பலமாகியுள்ளன. இதற்கான ஆதாரமாகப் பிப்ரவரி மற்றும் மார்ச் 2026-ல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. தைவானுக்கு மிக அருகில் உள்ள ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள 5 விமானத் தளங்களிலும், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள 1 விமானத் தளத்தில் என 6 முக்கிய விமானத் தளங்களில் இந்த டிரோன்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராணுவ வல்லுநர்களின் கருத்துப்படி, இந்த டிரோன்கள் சாதாரண டிரோன்களைப் போலச் செயல்படாமல், 'குரூஸ் ஏவுகணைகள்' போலச் செயல்படும். போரின் ஆரம்பக் கட்டத்தில், நூற்றுக்கணக்கான இந்த பழைய டிரோன்களை ஒரே நேரத்தில் ஏவுவதன் மூலம் தைவானின் விலையுயர்ந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வீணடிக்கச் செய்வது சீனாவின் திட்டம். காலாவதியான விமானங்களைப் பயன்படுத்துவதால் சீனாவுக்குச் செலவு மிகக் குறைவு. ஆனால், இதைத் தடுக்கத் தைவான் பயன்படுத்தும் ஏவுகணைகள் மிக அதிக விலை கொண்டவை.
இந்த 'ஜே-6 டபுள்யூ' (J-6W) டிரோன்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்கத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் புதிய 'கவுண்டர்-டிரோன்' (Counter-drone) அமைப்புகளை விரைந்து பெற்று வருவதாகவும், மின்னணுப் போர் முறைகள் மூலம் இவற்றை முறியடிக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.