செப்டம்பரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு - 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

 

சீன அதிபர் ஜி ஜின்பிங், வரும் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புது டெல்லியில் நடைபெறவுள்ள 18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வருகை: 2020-ம் ஆண்டு எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்னர், 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த 2-ஆவது முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் இந்தியா வந்திருந்தார். இந்த உயர்மட்ட வருகையை முன்னிட்டு, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சமீபத்தில் பெய்ஜிங் சென்று முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

சீன வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புது டெல்லிக்கு நேரில் வருகை தந்து மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தவிர்த்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்படப் பல உலக தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். எல்லைப் பகுதியில் பதற்றம் தணிந்து இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பி வரும் சூழலில், இந்தச் சந்திப்பு ஆசியப் பிராந்தியத்தில் மிகப்பெரிய அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.