‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது ராணுவத் தளங்களை உளவு பார்த்த சீனச் செயற்கைக்கோள்கள்... ஆய்வறிக்கையில் அதிர்ச்சி!
‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது, குஜராத் கடற்கரைப் பகுதிகளில் உள்ள இந்திய விமானப்படைத் தளங்கள், கடற்படைத் தளங்கள், துறைமுகங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி மையங்களை 3 சீனச் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்ததாக விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான டிகந்தரா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் பாதுகாப்புத் தளங்களைக் கூடுதல் நேரம் கண்காணிப்பதற்காக அந்தச் செயற்கைக்கோள்கள் தங்களது வழக்கமான சுற்றுப்பாதையிலும் மாற்றங்களைச் செய்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூருவைத் தளமாகக் கொண்ட விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான டிகந்தரா நடத்திய ஆய்வில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது நிங்ஸியா-14, காவோஃபென்-11 மற்றும் யாவோகன்-30 ஆகிய சீனச் செயற்கைக்கோள்கள் குஜராத் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன. மேலும், யாவோகன்-43 01ஜி உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட ஒளிப்படக் கருவிகள் மற்றும் மின்னணு உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் திறன் கொண்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடங்கிய மே 7-ஆம் தேதியன்று, இந்தச் செயற்கைக்கோள்கள் தங்களது சுற்றுப்பாதை அளவுருக்களில் மாற்றம் செய்து, இந்தியப் பாதுகாப்புத் தளங்களின் மேல் நீண்ட நேரம் கடந்து செல்லுமாறு மாற்றியமைக்கப்பட்டதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் குஜராத் கடற்கரையில் இவற்றின் கவனம் அதிகமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள புஜ்ய் விமானப்படைத் தளம், மேற்கு கட்ச் பகுதியில் உள்ள நலியா முன்கள விமானப்படைத் தளம் மற்றும் ஐ.என்.எஸ். சர்தார் படேல், ஐ.என்.எஸ். துவாரகா உள்ளிட்ட கடற்படை வசதிகள் ஆகியவை இப்பகுதியில் அமைந்துள்ளன. இவை தவிர, ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை வளாகம் உள்ளிட்ட முக்கிய வணிக மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகளும் கண்காணிப்பு எல்லைக்குள் வந்ததாக ஆய்வறிக்கை கூறுகிறது.
கடந்த 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு முந்தைய நாட்களிலும் சீனச் செயற்கைக்கோள்கள் அசாதாரணமான பாதை மாற்றங்களை மேற்கொண்டு பஹல்காம் பகுதியைக் கண்காணித்ததாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோதல் காலகட்டங்களில் செயற்கைக்கோள்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால், விண்வெளி வழி உளவுத் தகவல்களைக் கண்டறிந்து தடுக்கும் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.