பெற்றோர்களே உஷார்... சிப்ஸ் பாக்கெட் பொம்மை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பலி!
கர்நாடக மாநிலம் மைசூரில் சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த சிறிய பரிசுப் பொம்மை தொண்டையில் சிக்கியதால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் ஒரே மகனான முகுந்த் மயூர், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பரிசுப் பொம்மையை விளையாடிக்கொண்டிருந்தபோது தன் வாயில் வைத்துள்ளான். விளையாட்டாக வாயில் வைத்த அந்தப் பொருள் அவனுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சிறிய பிளாஸ்டிக் பொருள் திடீரெனத் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் சிறுவனால் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளான். பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக உதவ முயன்றபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போனது மிகுந்த வேதனையை அளித்துள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவனின் உயிர் பிரிந்ததாகக் கூறித் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒரே மகனை இழந்த பெற்றோர் தற்போது தங்களது கண்ணீருடன் பரிதவித்து வருவது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. அப்பகுதி மக்களும் இந்த திடீர் உயிரிழப்பால் கடும் அதிர்ச்சியடைந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இது போன்ற சிறிய பொருட்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு ஆபத்தானவை என்பதை இந்தச் சோக நிகழ்வு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.