மதுரையில் களைகட்டியது சித்திரைத் திருவிழா! தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம்!
மதுரை மாநகரின் அடையாளமான மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா, இன்று (ஏப். 19) காலை கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இன்று காலை மீனாட்சி - சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் சுவாமி சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "மீனாட்சி சொக்கநாதா" என முழக்கமிட்டுச் சாமியைத் தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் சுவாமி - அம்மன் காலை மற்றும் இரவு நேரங்களில் மாசி வீதிகளில் வலம் வருவார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சிகளாக ஏப்ரல் 26: மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் (இரவு 7.05 - 7.29 மணி)
ஏப்ரல் 27: திக்விஜயம்
ஏப்ரல் 28: மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
ஏப்ரல் 29: மாசி வீதிகளில் தேரோட்டம்
ஏப்ரல் 30: கள்ளழகர் எதிர்சேவை
மே 1: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்
திருக்கல்யாணத்தைக் காண ரூ. 200 மற்றும் ரூ. 500 கட்டணச் சீட்டுகளை இன்று முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு 9 மணி வரை ஆன்லைனில் (maduraimeenakshi.hrce.tn.gov.in) பதிவு செய்யலாம். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஏப்ரல் 23-ல் தகவல் தெரிவிக்கப்படும்.
தற்போது வெயிலின் தாக்கம் சுட்டெரிப்பதால், சித்திரை வீதிகளில் பக்தர்கள் சிரமமின்றிச் செல்ல பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.