சித்திரைத் திருவிழா... கள்ளழகர் ஆற்றில் இறங்க வைகை அணை திறப்பு!

 

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக, வைகை அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 6 நாட்களுக்கு இந்தத் தண்ணீர் திறக்கப்படும். இது அழகர் ஆற்றில் இறங்கும் போது ஆற்றில் போதிய நீர் இருப்பதை உறுதி செய்யும். வரும் மே 1-ஆம் தேதி அதிகாலையில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.


அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்குப் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளைக் குளிப்பாட்டவோ வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மதுரை சித்திரைத் திருவிழா ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகப் பாதுகாப்புப் பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.