சித்ரா பவுர்ணமி... தமிழகம் முழுவதும் 11,823 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை மொத்தம் 11,823 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி திதியானது நாளை ஏப்ரல் 30ம் தேதி இரவு 9:50 மணிக்குத் தொடங்கி, மே 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11:07 மணி வரை நீடிக்கிறது. இந்தச் சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இந்தச் சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக மூன்று முக்கியப் பேருந்து முனையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து நாளை 548 பேருந்துகளும், மே 1-ம் தேதி 565 பேருந்துகளும், மே 2-ம் தேதி 35 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை 186 பேருந்துகளும், மே 1-ம் தேதி 174 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அடையார் முனையத்திலிருந்து நாளை 55 பேருந்துகளும், மே 1-ம் தேதி 50 பேருந்துகளும் சிறப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும். இவை தவிர சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பயணிகளின் வசதிக்காகச் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மே 1-ம் தேதி மட்டும் 40 குளிர்சாதன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் பிரத்யேகமாக இயக்கப்படுகின்றன. நீண்ட தூரம் பயணம் செய்யும் பக்தர்கள் மற்றும் முதியவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால், பக்தர்கள் தங்களது பயணத்தைத் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இணையதளம் மூலம் முன்பதிவு வசதியைப் பயன்படுத்தி இருக்கைகளை உறுதி செய்துகொள்வது பயணத்தை எளிதாக்கும்.