குருத்தோலை ஞாயிறு - வேளாங்கண்ணியில்  "ஒசன்னா" கீர்த்தனைகளுடன் திரளான கிறிஸ்தவர்கள் பவனி! 

 

நாகப்பட்டினம் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்திப் பவனியாகச் சென்று தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

இன்று காலை பேராலய முகப்பில் இருந்து குருத்தோலை பவனி தொடங்கியது. இதில் பங்கேற்ற திரளான கிறிஸ்தவர்கள், குருத்தோலைகளை அசைத்தபடி "ஒசன்னா" கீர்த்தனைகளைப் பாடி ஊர்வலமாகச் சென்றனர். இந்தப் பவனியானது சர்ச் ரோடு, நடுதிட்டு வழியாகச் சென்று பேராலயத்தின் மேல்கோவில் பகுதியில் நிறைவடைந்தது.

முன்னதாக நடைபெற்ற சிறப்புத் திருப்பலியைப் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமை தாங்கி நிறைவேற்றினார். இதில் ஏராளமான அருட்சகோதரிகள், சகோதரர்கள் மற்றும் வெளியூர் யாத்ரீகர்கள் கலந்துகொண்டனர். வேளாங்கண்ணிக்கு வரும் பல்வேறு மாநிலப் பக்தர்களுக்காகத் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் சிறப்புத் திருப்பலிகள் இன்று நடத்தப்படுகின்றன.

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் இறுதி வாரமான 'புனித வாரம்' (Holy Week) இன்று முதல் தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 2ம் தேதி 'பெரிய வியாழன்', ஏப்ரல் 3ம் தேதி இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் 'புனித வெள்ளி' (Good Friday) ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேளாங்கண்ணி பேராலயத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.