தேவாலய மேல்தளம் இடிந்து விழுந்து விபத்து; பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதியான வேலூர் மாவட்டம் காட்பாடியில், தேவாலயக் கட்டுமானப் பணி நடைபெற்றபோது மேல்தளம் சரிந்து விழுந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் காட்பாடியை அடுத்த மந்திகிருஷ்ணாபுரம் பகுதியில் தேவாலயத்தில் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அப்போது மேல்தளக் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகச் சாரம் திடீரென எதிர்பாராதவிதமாகச் சரிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டோரில் 8 பேர் படுகாயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் போராடி மீட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.