"முதலமைச்சருக்குச் சட்னியா? சாம்பாரா?" - அண்ணாமலை விமர்சனம்!

 

தமிழகத்தில் அதிகரிந்து வரும் போக்சோ வழக்குகள் குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மாநிலத்தில் இயங்கும் சில உண்மை சரிபார்ப்பு இணையதளங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்த தரவுகளைச் சுட்டிக்காட்டி அண்ணாமலை பேசுகையில், 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.

"நான் முன்னதாகப் பேசும்போது 39,900 வழக்குகள் என்று எண்ணிக்கையைக் சற்றுக் குறைத்துக் கூறிவிட்டேன். இதற்காக நான் உரிய உண்மை சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும்" எனத் தனது தவறை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சில உண்மை சரிபார்ப்புத் தளங்களின் செயல்பாடுகள் குறித்து அண்ணாமலை கிண்டலாகப் பேசினார்.

"தமிழகத்தில் சில உண்மை சரிபார்ப்புத் தளங்கள் எப்படி இயங்குகின்றன தெரியுமா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இட்லிக்குச் சட்னி வைத்துக் கொண்டாரா? அல்லது சாம்பார் வைத்துக் கொண்டாரா? என்ற அளவிலேயே அவர்களின் ஆய்வு இருக்கிறது. இது போன்ற தளங்கள், மாநிலத்தில் நடக்கும் மிக முக்கியமான குற்றச் சம்பவங்களின் தரவுகளைச் சரிபார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை."

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இந்த 40,000-த்தை நெருங்கும் போக்சோ வழக்குகள் காட்டுகின்றன என்றும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாறி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாகத் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.