அமெரிக்காவை உலுக்கும் 'சிகாடா' கொரோனா.. 25 மாகாணங்களில் தொற்று அதிகரிப்பு.. 75 உருமாற்றங்களால் தடுப்பூசிக்கும் சவால்?!

 

அமெரிக்காவில் பிஏ.3.2 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது. சிகாடா பூச்சிகளைப் போலவே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இதற்கு 'சிகாடா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் முதன்முதலில் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் ஜூன் 2025-ல் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டாலும், கடந்த சில வாரங்களாகத்தான் 25-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் இதன் பரவல் தீவிரமடைந்துள்ளது. இது ஒமைக்ரான் குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், அதன் ஸ்பைக் புரோட்டீனில் மட்டும் சுமார் 70 முதல் 75 வரையிலான உருமாற்றங்களைக் கொண்டுள்ளது. இது முந்தைய வைரஸ்களை விட மிக அதிகம்.

தற்போது பயன்பாட்டில் உள்ள 2025-2026 காலத்திற்கான கோவிட் தடுப்பூசிகள், இதற்கு முந்தைய ஜேஎன்.1 (JN.1) வகை வைரஸ்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டவை.

சிகாடா வைரஸில் உள்ள 75 உருமாற்றங்கள் காரணமாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி ஊடுருவும் திறன் இதற்கு அதிகமாக உள்ளது. இதனால் ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தடுப்பூசி போட்டவர்களுக்குப் பெரிய அளவில் உயிரிழப்போ அல்லது தீவிரமான பாதிப்போ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அறிகுறிகள் முந்தைய ஒமைக்ரான் வகைகளைப் போலவே உள்ளன. கடுமையான தொண்டை வலி மற்றும் இருமல். காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் தலைவலி. மூச்சுத் திணறல் மற்றும் சிலருக்கு வாசனை/சுவை இழப்பு. ஒரு சிலருக்கு வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.