2009 க்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் வாங்க வாழ்நாள் தடை... அதிரடி சட்டம்!
இங்கிலாந்து நாட்டில் வருங்கால சந்ததியினரை புகையிலை பழக்கத்தில் இருந்து காக்க அந்நாட்டு அரசு மிகக் கடுமையான புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு பிறந்த எவருக்கும் ஆயுள் முழுவதும் சிகரெட் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 17 வயது அல்லது அதற்கு கீழ் உள்ள இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் சட்டப்பூர்வமாக புகையிலைப் பொருட்களை வாங்கவே முடியாது. புகை இல்லாத புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அந்நாட்டு நாடாளுமன்றம் எடுத்துள்ளது.
புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் மருத்துவச் செலவுகளைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிகரெட் மட்டுமின்றி மின்னணு சிகரெட் எனப்படும் வேப் கருவிகளுக்கும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. குறிப்பாக பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெளியே புகைபிடிக்க இனி அனுமதி கிடையாது. இந்த சட்டத்தை மீறி இளைஞர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யும் வணிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்திற்கு அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள அதே வேளையில் புகையிலை நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும் பொதுமக்களின் உடல்நலமே முக்கியம் என அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது. புகையிலை பழக்கத்தினால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதைத் தடுக்க இதுவே சரியான வழி என மருத்துவ வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 2027 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டத்தின் விதிகள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.