சகோதரிகளுக்குப் பாலியல் தொல்லை தந்த லாரி டிரைவர் - 10ம் வகுப்பு மாணவி அரளி விதை குடித்து தற்கொலை முயற்சி!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவரால், 10-ஆம் வகுப்பு மாணவி அரளி விதை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் மாசாணி (52) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சகோதரிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டி வந்துள்ளார். மாசாணியின் பாலியல் தொல்லையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி, விரக்தியில் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மாணவி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மாணவி அளித்த வாக்குமூலத்தில், லாரி டிரைவர் மாசாணி தனக்கும் தனது அக்காவிற்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாலேயே தான் இந்த முடிவை எடுத்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் லாரி டிரைவர் மாசாணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.