செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்... அளவுக்கதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு 10ம் வகுப்பு மாணவி தற்கொலை!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், அளவுக்கதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சுமார் 30க்கும் மேற்பட்ட மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிகளவிலான மாத்திரைகளைச் சாப்பிட்டதால் மாணவிக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டின் உள்ளேயே மயங்கி விழுந்து கிடந்துள்ளார். இந்நிலையில், வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் மாணவி மயங்கிய நிலையிலிருந்ததைக் கண்டு அலறியடித்துக் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடினர்.
மயக்கமடைந்த மாணவியை மீட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் மரணம் குறித்துக் காவல் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி காவல் துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், செல்போன் பார்த்தை பெற்றோர் கண்டித்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 10ம் வகுப்பு பயிலும் மாணவி 30 மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.