10-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை...வீட்டு உரிமையாளர் வெறித்தனம்!
தெலுங்கானா மாநிலம், மச்சிலிப்பட்டினம் மாவட்டம் நிஜாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரகு (என்கிற பூசாரி) என்பவருக்குச் சொந்தமான வீட்டில், 15 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். அந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரகு அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி இரவில் சினிமாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். திரையரங்கில் படம் பார்த்துவிட்டுத் திரும்பும் போது தாமதமானதால், பாதுகாப்புக் கருதிச் சிறுமியைத் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். அந்த நள்ளிரவு நேரத்தில், சிறுமியை மிரட்டி அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு ரகு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர் வன்கொடுமையால் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். இந்த நிலையில், சிறுமிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்த போது வீட்டு உரிமையாளர் ரகு செய்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நிஜாம்பேட்டை போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ரகு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.