அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரிழப்பு... 3 பக்க கடிதம், பெட்ரோல் பாட்டில் கண்டெடுப்பு!
டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்த 17 வயது மாணவி ஒருவர் தீக்காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணா நகரில் உள்ள 'சர்வோதயா கன்யா வித்யாலயா' அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளியின் காவலர் அறைக்குப் பின்புறம் மாணவி ஒருவர் கடுமையான தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மாணவியின் பள்ளிப் பையைச் சோதனையிட்டபோது, அதிலிருந்து 3 கடிதங்கள் மற்றும் ஒரு பெட்ரோல் பாட்டில் உள்ளிட்ட பொருட்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே மாணவி இந்த எல்லைமீறிய முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், மாணவியின் தோழிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.