12-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - நண்பர் உட்பட 6 பேரிடம் விசாரணை.. சென்னையில் மீண்டும் அதிர்ச்சி!
சென்னை போரூர் அருகே கெருகம்பாக்கம் பகுதியில் 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச் செயலில் ஈடுபட்டதாக சிறுமியின் நண்பர் உள்ளிட்ட 6 பேரைப் போரூர் அனைத்து மகளிர் போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், சமீபத்தில் நடந்து முடிந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால், மீண்டும் துணைத் தேர்வு எழுதுவதற்காக வீட்டிலிருந்து படித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குத் திரும்பிய அந்தச் சிறுமி உடல் நலம் மற்றும் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அழுதுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் விசாரித்தபோது, தான் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கூறி சிறுமி கதறியுள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
குன்றத்தூர் பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கேள்விப்பட்டு, அவரைப் பார்ப்பதற்காகச் சிறுமி சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பும்போது, காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அவரது மற்றொரு ஆண் நண்பர் மோட்டார் சைக்கிளில் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏற்றியுள்ளார். ஆனால், அவர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், போரூர் அருகே கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற ஒரு காலி மைதானத்திற்குத் கடத்திச் சென்றுள்ளார். அங்குத் தனது நண்பர்கள் சிலரையும் வரவழைத்து, அவர்கள் அனைவரும் சேர்ந்து சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட சிறுமியுடன் அவரது மற்றொரு தோழியும் உடன் சென்றுள்ளார். ஆனால், அவர் கெருகம்பாக்கம் பகுதிக்குச் செல்லாமல் முன்னரே தனது வீட்டிற்குச் சென்று விட்டதால், இந்த ஆபத்திலிருந்து நல்வாய்ப்பாகத் தப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தலைமறைவாக இருந்த சிறுமியின் நண்பர் உட்பட 6 பேரைச் சில மணி நேரங்களிலேயே போலீசார் மடக்கிப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இக்குற்றச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கும் பகுதி சென்னை போலீஸ் கமிஷனரக எல்லையிலும், குற்றச் சம்பவம் நடைபெற்ற கெருகம்பாக்கம் பகுதி ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லையிலும், பிடிபட்ட நபர்கள் தாம்பரம் கமிஷனரக எல்லைப் பகுதியையும் சேர்ந்தவர்கள் என்பதால், மூன்று கமிஷனரக போலீசாரும் இணைந்து இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.