3-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை... 52 வயது முதியவர் வெறித்தனம்!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தமபாளையம் பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி 3-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு கந்தன் (52) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில், கந்தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ₹5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் ₹50,000 இழப்பீடு வழங்கிட நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்குகள் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், 8-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டது தொடர்பாகச் சிறப்புப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சியில் மாயமான 10 வயது சிறுமி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு ஒரு வாரமாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காதது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்பட்ட சிறப்பு 'சிங்கப்பெண் படை'யின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தி, மாயமாகும் குழந்தைகளைக் கண்டறியவும், குற்றங்களைத் தடுக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.