பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3ம் வகுப்பு மாணவி பலி - வேனை ரிவர்ஸ் எடுத்தபோது விபரீதம்!

 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3ஆம் வகுப்பு படித்து வந்த மேகனா என்ற சிறுமி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இந்த விபத்து மீண்டும் எழுப்பியுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் வசித்து வரும் மேகனா என்ற 8 வயது சிறுமி, அங்குள்ள பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் பள்ளி வேன் மூலம் சிறுமி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளி வளாகத்தில் குழந்தைகளை இறக்கிவிட்ட வேன் ஓட்டுநர், வாகனத்தைப் பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் பின்னால் நின்று கொண்டிருந்த மாணவி மேகனா மீது வாகனம் மோதியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சிறுமியின் மீது வேனின் சக்கரம் ஏறியது.

இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமி மேகனா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். சக மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கண் முன்னே நடந்த இந்த விபத்தைக் கண்டு அலறியடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏற்காடு போலீசார், உயிரிழந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் மரணச் செய்தியைக் கேட்டுப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சைக் கலங்கச் செய்தது.

பள்ளிக் குழந்தைகளை இறக்கிவிடும் போது மற்றும் வாகனங்களை இயக்கும் போது ஓட்டுநர்கள் தகுந்த உதவியாளர்களின் துணையோடு எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும் என்ற விதிகள் உள்ள நிலையில், ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி வேன் ஓட்டுநரைத் தடுத்து வைத்துக் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள்ளேயே வேன் சக்கரத்தில் சிக்கி மாணவி பலியான சம்பவம் ஏற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.