4ம் வகுப்பு சிறுமி கடத்தி, வன்கொடுமை... "சிங்கப்பெண் படை இருந்தும் பாதுகாப்பில்லையா?" - வேல்முருகன் கண்டனம்!
கிருஷ்ணகிரியில் 4-ம் வகுப்புப் பள்ளிச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4-ஆம் வகுப்புப் பயிலும் சிறுமி மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள வேல்முருகன், "எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவா? வேண்டாமா?" என்று பெற்றோர்கள் அஞ்சும் அளவிற்குச் சூழல் நிலவுவதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பேசிய வேல்முருகன், "சிங்கப்பெண் என்ற பெயர் மட்டும் போதாது; ஒரு பெண் குழந்தை எவ்வித அச்சமுமின்றி பள்ளிக்குச் சென்று தனது உயிரும் கண்ணியமும் காக்கப்பட்டுப் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும். அதுவே அந்தப் படையின் உண்மையான வெற்றியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.