பெற்றோர் கண்டித்ததால் விருகம்பாக்கத்தில் 8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

 

சென்னை விருகம்பாக்கம் பகுதியில், பெற்றோர் படிப்புக் குறித்துக் கண்டித்ததால் மனமுடைந்த 13 வயது பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்துரு - நந்தினி தம்பதியினரின் மகள் பூஜா (13). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, பூஜா தனது தோழிகளுடன் நீண்ட நேரம் வெளியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பிய போது, படிப்பில் கவனம் செலுத்தாமல் எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பதாகக் கூறி, பெற்றோர் அவரைச் சற்றுக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

பெற்றோரின் கண்டனத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவி பூஜா, அழுதுகொண்டே தனது அறைக்குள் சென்று கதவைப்பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், கதவைத் தட்டியுள்ளனர்.

உள்ளே இருந்து எவ்வித பதிலும் வராததால் அதிர்ச்சியடைந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, பூஜா அறையினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருகம்பாக்கம் காவல் நிலையப் போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.