பள்ளியில் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவர் படுகாயம் - திருவள்ளூர் அருகே கொடூரம்!

 

திருவள்ளூர் அருகே பள்ளி நேரத்தில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 14 வயது மாணவர் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் அப்பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்துள்ள வயலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மோனிஷ் (14) என்ற மாணவர், வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளிக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சமையலறை கட்டிடத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த சக மாணவர்களின் உதவியுடன் அவர் அந்த கட்டிடத்தின் மீது ஏறியுள்ளார். அப்போது கட்டிடத்திற்கு மிக அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக மோனிஷ் உரசியுள்ளார். இதில் கணப்பொழுதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த பள்ளி ஆசிரியர்கள் மயங்கிக் கிடந்த மாணவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மப்பேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி வளாகத்திற்கு அருகே திறந்தவெளியில் சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பி மற்றும் கட்டடத்தின் பாதுகாப்பு நிலை குறித்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.