அதிர்ச்சி... 48 பள்ளிகளில் முதலாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை... !   

 

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையானது மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள 48 அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதலாம் வகுப்பில் ஒரு புதிய மாணவர் கூட சேர்க்கப்படவே இல்லை என்ற  அதிர்ச்சி தரும் தகவல்கள்  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வித் துறையின் இந்த மந்தமான நிலை, பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களின் சேர்க்கையை கணிசமாக அதிகரிப்பதற்காகப் பல்வேறு உன்னதமான நலத்திட்டங்களும், விழிப்புணர்வுப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன. ஆனால் தற்போதைய நடப்பு கல்வியாண்டில் புதிய மாணவர்களை ஈர்ப்பதற்கு அரசுத் தரப்பிலும் கல்வித் துறை அதிகாரிகளின் சார்பிலும் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிகாரிகளின் இத்தகைய அலட்சியப் போக்கே இந்த திடீர் சரிவுக்கு முக்கியக் காரணம் என நம்பப்படுகிறது.

இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதில் செலுத்தும் அதீத கவனத்தை, மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதிலும் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளனர். ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்த 48 பள்ளிகளை மீட்டெடுக்க அரசு உடனடியாகப் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.