17 ஏக்கரை நொடியில் சாம்பலாக்கும் ‘கிளஸ்டர்’ ஏவுகணை.. வடகொரியாவில் அடுத்தடுத்த ஆயுதச் சோதனைகள் - கொரிய தீபகற்பத்தில் போர் மேகங்கள்!
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் எச்சரிக்கைகளை மீறி, வடகொரியா தனது ராணுவ வலிமையை நிரூபிக்கும் வகையில் அதிபயங்கர அழிவுத்திறன் கொண்ட 'கிளஸ்டர் பாம்' ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
வடகொரியா தற்போது சோதித்துள்ள இந்த புதிய வகை ஏவுகணை, சாதாரண ஏவுகணைகளை விடப் பல மடங்கு ஆபத்தானது. இந்த ஏவுகணை இலக்கை நெருங்கியதும், அதன் தலைப்பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான சிறிய ரகக் குண்டுகள் பிரிந்து நாலாபுறமும் சிதறி விழும்.
ஒரே ஒரு ஏவுகணை மூலம் சுமார் 17 ஏக்கர் பரப்பளவை நொடிப் பொழுதில் முழுமையாகச் சிதறடித்துச் சாம்பலாக்கிவிடும் வல்லமை கொண்டது. இது எதிரி நாட்டு ராணுவ முகாம்களை மொத்தமாக அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் வடகொரியா மற்றுமொரு வினோதமான ஆயுதத்தையும் சோதித்துள்ளது. தென்கொரியாவின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு 'கார்பன்-பைபர்' குண்டுகளை அது தயாரித்துள்ளது.
இந்த குண்டுகள் வெடிக்கும்போது வெளியாகும் மெல்லிய கார்பன் இழைகள், மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பிகளில் படிந்து குறுகிய மின்சுற்றை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த நகரத்தையே இருளில் மூழ்கடிக்கச் செய்யும்.
தென்கொரியாவின் விமானப் படை மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகளை முடக்குவதே இந்தச் சோதனைகளின் நோக்கம் எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். ஜப்பான் மற்றும் அமெரிக்கா இந்தச் சோதனைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகளை மீறி வடகொரியா இத்தகைய சோதனைகளை மேற்கொள்வது ஆசியப் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.