முதலமைச்சர் மாநில இளைஞர் விருது... விண்ணப்பிக்க ஜூலை 6 கடைசி நாள்!
தமிழ்நாட்டில் சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் சிறப்பான சேவையாற்றி வரும் இளைஞர்களின் பணியைப் பாராட்டும் வகையில், மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரை உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்பட உள்ளன. கடந்த 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2026 மார்ச் 31 ஆம் தேதி வரை சமூக நலனுக்காக ஆற்றிய பணிகள் மட்டுமே இந்த விருதுக்காகக் கருத்தில் கொள்ளப்படும்.
இதற்கான தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக தங்களது விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் வரும் ஜூலை 6 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை முழுமையாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் சிறந்த இளைஞர்களுக்கு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்த விருதுகள் முறைப்படி வழங்கப்படும்.