பத்மஸ்ரீ திருமதி.சின்னப் பிள்ளைக்கு கலைஞரின் கனவு திட்டத்தில் உடனடியாக வீடு வழங்க முதல்வர் உத்தரவு!
பத்மஸ்ரீ விருதுப்பெற்ற சமூக செயற்பாட்டாளர் சின்னப்பிள்ளைக்கு பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படாத நிலையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான சின்னப்பிள்ளை, களஞ்சியம் என்ற சுயஉதவிக்குழுவின் தலைவியாக இருந்து, பெண் விவசாய கூலிகளுக்கு நியாயமான கூலியைப் பெற்றுக் கொடுத்தார். கந்துவட்டி கொடுமையில் இருந்து பல குடும்பங்களை மீட்டெடுத்தார்.
இதுகுறித்து வேதனையை வெளிப்படுத்திய சின்னப்பிள்ளை, "நான் பாட்டுக்கு வீட்டுல இருந்தேன். திடீரென்று நாலு பேர் வந்து சால்வை போர்த்தினாங்க. மோடியோட ‘அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்’ இருக்கு. அதுல வீடு கட்டி தர்றோம்னு சொன்னாங்க. பட்டா கொடுத்தாங்க. ஆனா ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. இதுவரை வீடு கட்டித் தரலை. என்னாலையும் எதுவும் செய்ய முடியல” என கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
அவர் கண்கலங்கிப் பேசிய அந்த வீடியோ ஊடகங்களில் செய்தியானது. இது தமிழக முதல்வரின் பார்வைக்குச் சென்றதால், உடனடியாக சின்னப்பிள்ளைக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், சின்னப்பிள்ளைக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு சென்ட் வீட்டுமனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர். அத்துடன் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்குப் புதிய வீடு வழங்கவும் இதற்கான பணிகளை இந்த மாதத்திலேயே தொடங்கவும் உத்தரவிட்டுள்ளார் முதல்வர். வீடு இல்லையே என்று கலங்கி நின்ற சின்னப்பிள்ளை முதல்வரின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.