தன்னுடன் பயணம் செய்தவர்களுக்கு ரூ500 கொடுத்து டிக்கெட் வாங்கிய முதல்வர் விஜய்!

 

 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விரிவுபடுத்தப்பட்ட மகளிருக்கான ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று (அக்.2) தொடங்கி வைத்தார். இதையொட்டி, பேருந்தில் பயணம் செய்தபோது அவர் நடத்திய உரையாடலும், செய்த செயலும் கவனம் பெற்றது.

கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் ஏறிய முதல்-அமைச்சர் விஜய், மகளிர் பயணிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகளை வழங்கினார். பின்னர் பேருந்து நடத்துநரிடம், “நான் சரியாக டிக்கெட் கொடுக்கிறேனா?” எனக் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது பேருந்தில் பயணம் செய்த ஆண் பயணிகளுக்கான பயணக் கட்டணத்தை செலுத்துவதற்காக, விஜய் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.500 நோட்டை நடத்துநரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வின்போது பேருந்தில் இருந்த பயணிகளுடன் விஜய் உரையாடியதுடன், அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் தொடக்க நிகழ்வாக இந்தப் பயணம் அமைந்தது.

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம், ஏற்கனவே பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்கப்பட்ட சாதாரண நகரப் பேருந்துகளுடன், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளும் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 12,692 அரசு பேருந்துகளில் இந்த விரிவாக்கப்பட்ட திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.