செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு - அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

 

சென்னையின் முக்கியக் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில், தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வரும் சூழலில், முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

செம்பரம்பாக்கம் ஏரி வளாகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை, அமைச்சர்கள் ரஞ்சித் குமார், தென்னரசு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, ஏரியின் தற்போதைய நீர்மட்டம், வினாடிக்கு வரும் நீர்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேற்றம் தொடர்பான நிலவரங்களை வரைபடங்கள் வாயிலாக அதிகாரிகளிடம் முதலமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கியப் பகுதிகளான ஐந்து கண் மதகு மற்றும் 19 கண் மதகு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று நீரின் வேகத்தையும், அணையின் பாதுகாப்பையும் பார்வையிட்டார். மழைநீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏரியின் கரையோரப் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கைகளை உடனுக்குடன் வழங்கவும், உபரிநீரைத் திட்டமிட்டுப் பாதுகாப்பாகத் திறந்து விடவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.