"விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டார் முதல்வர் விஜய்" - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!

 

கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாகக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பிற்குத் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் இந்த புதிய பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,  "சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தும் 'முழுமையாகத் தள்ளுபடி' செய்யப்படும் என்று தற்போதைய முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். கடனுக்கான உச்ச வரம்பு எதுவும் அப்போது சொல்லப்படவில்லை. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வெறும் ரூ.75,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி என்று உச்ச வரம்பு நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்."

கூட்டுறவு வங்கிகளில் தங்களது தேவைக்காக லட்சக்கணக்கில் கடன் பெற்றுள்ள நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள் இந்த ரூ.75,000 வரம்பு அறிவிப்பால் எந்தவித பயனும் பெறப் போவதில்லை என்று சுட்டிக்காட்டினார்.

வாக்குறுதி அளித்தபடி எல்லையற்ற முழுமையான கடன் தள்ளுபடியை அறிவிக்காமல், இப்படித் தள்ளுபடியில் உச்ச வரம்பை நிர்ணயம் செய்ததன் மூலம் முதலமைச்சர் விஜய் ஒட்டுமொத்த விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டதாகப் பி.ஆர்.பாண்டியன் ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், அரசு இந்த உத்தரவை உடனடியாக மறுபரிசீலனை செய்து, கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்துப் பயிர்க்கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இக்குற்றச்சாட்டு தற்பொழுது அரசியல் மற்றும் விவசாய வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.