நாளை மறுநாள் முதல்வர் விஜய் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்!
முதலமைச்சர் விஜய் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி மதுரை செல்லும் போது, உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 28-ம் தேதி மதுரை செல்கிறார். இந்த நிகழ்ச்சி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் முதன்முறையாக மதுரை செல்வதால், அவரது வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதலமைச்சரின் வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் ராஜாஜி அரசு மருத்துவமனை, மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேவைக்கேற்ப வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் விஜய் பங்கேற்க முடியாத நிலையில், தற்போது மதுரை வருகையின்போது கோவிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது கோவில் பயணத்தின் இறுதி நேர அட்டவணை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.