மதுரை வந்த முதல்வர் விஜய்! விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு - “தாய்மாமனே வருக!” என குவிந்த தொண்டர்கள்!
தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று (செப்.28) மதுரை சென்றுள்ளார். மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் விஜய்யை வரவேற்க ஏராளமானோர் காத்திருந்தனர். பலர் கையில் பதாகைகளை ஏந்தியபடி அவரை வரவேற்றனர். குறிப்பாக, ‘தாய்மாமனே வருக.. வருக!’ என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகள் கவனம் பெற்றன.
விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் சாலை மார்க்கமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் தகுதியான குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. ஜூன் 22, 2026 முதல் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து, மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விஜய் சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியும் பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் வருகையையொட்டி மதுரை விமான நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, காந்தி அருங்காட்சியகம், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து அவர் செல்லும் வழித்தடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.