மீனாட்சி அம்மன் வேடத்தில் நின்ற குழந்தை... தூக்கி வாழ்த்திய முதல்வர் விஜய்! மதுரையில் நெகிழ்ச்சி
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று (செப்.28) மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் சாலை மார்க்கமாக சென்றபோது, வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் செல்லும் வழித்தடங்களில் மக்கள் காத்திருந்து அவரை வரவேற்றனர். இந்த நிலையில், சாலையோரத்தில் மீனாட்சி அம்மன் வேடமணிந்து நின்றிருந்த பெண் குழந்தை ஒன்று முதல்வர் விஜய்யின் கவனத்தை ஈர்த்தது.அந்தக் குழந்தையை பார்த்த விஜய், அவரை அருகில் அழைத்து தூக்கி அன்புடன் வாழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையுடன் சிறிது நேரம் அன்பாக இருந்த பின்னர், விஜய் தனது பயணத்தை தொடர்ந்தார்.
இந்தக் காட்சி அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது. மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மீனாட்சி அம்மன் வேடத்தில் குழந்தை நின்றிருந்ததும், அதை விஜய் தூக்கி வாழ்த்தியதும் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் விஜய் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியான குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை விஜய் திறந்து வைத்து பார்வையிட உள்ளார். தொடர்ந்து மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியும் பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
முதல்வர் வருகையையொட்டி மதுரை விமான நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அவர் பயணிக்கும் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்திலிருந்து மருத்துவமனை செல்லும் வழித்தடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டதால், அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.