சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய 17-வது தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிப்பதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. மாநிலத்தில் தவெக புதியதாகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் என்பதால், இக்கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.
சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரடியாகப் பங்கேற்றார். அவருடன் இணைந்து ஆளும் தவெக-வின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், அவையின் பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றின் முக்கியப் பிரதிநிதிகளும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
இக்கூட்டத்தில் விவாதங்களுக்குப் பிறகு, நடப்புக் கூட்டத்தொடரை மொத்தம் 3 நாட்களுக்கு (ஜூன் 19, 22, 23) நடத்துவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர் மிகக் குறுகிய கால அளவைக் கொண்டதாக இருப்பதால், வழமையாக நடைபெறும் சட்டமன்ற 'வினா-விடை நேரம்' இந்த முறை இடம்பெறாது என்று சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடரின் இறுதி நாளான ஜூன் 23 அன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் அவையில் விரிவான பதிலுரையை வழங்க உள்ளார்.