சென்னையில் 750 புதிய மின்சார பஸ்கள் - நாளை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

 

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், இரண்டாம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது 2-ம் கட்டமாக ஆலந்தூர், சென்ட்ரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பந்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து 750 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் தடையின்றி இயக்கப்பட உள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் நாளை இச்சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். தலைமைச் செயலக வளாகத்தில் இருந்து 5 மின்சார பஸ்களின் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

தொடக்க விழாவை முன்னிட்டு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆலந்தூர் மின்சார பஸ் பணிமனைக்கு நேரில் சென்று, மின்னேற்றிகள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது MTC மேலாண் இயக்குநர் த.மோகன், இணை மேலாண் இயக்குநர் ராம.சுந்தரபாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.