இன்று முதல் 35 துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் நேரடி ஆய்வு!
தமிழகத்தில் தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தங்களது தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றும் நோக்கில், இன்று முதல் வரும் ஜூலை 22-ம் தேதி வரை அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் தொடர் ஆய்வுக்கூட்டங்களை நடத்த உள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடிக்க உள்ள இந்த மெகா ஆய்வுக் கூட்டங்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகின்றன. இந்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டங்களில், அந்தந்தத் துறைகளின் அமைச்சர்கள், அரசு முதன்மைச் செயலாளர்கள் மற்றும் மூத்த உயர் அதிகாரிகள் அனைவரும் தங்களது துறை சார்ந்த கடந்த காலச் செயல்பாடுகள் மற்றும் வருங்காலத் திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கைகளுடன் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட சில முக்கியத் துறைகளை மட்டும் ஆய்வு செய்த முதலமைச்சர், தற்போது இன்று முதல் தமிழக அரசின் கீழ் இயங்கும் அனைத்து 35 துறைகளையும் நேரடியாக, தனித்தனியாக ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளார்.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்ற புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், 'வெற்றி தமிழகம் தொலைநோக்கு ஆவணம்' வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய அதிகாரங்களின் அடிப்படையில் 10 முக்கியத் தூண்கள் மற்றும் 54 உப-தூண்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 436 திட்டங்கள் இந்த தொலைநோக்குத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மெகா ஆய்வின் மூலம், ஒவ்வொரு துறையின் 1 ஆண்டு, 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான விரிவான செயல்பாட்டுத் திட்டங்கள் விவாதிக்கப்பட உள்ளன. தேர்தல் சமயத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார்.
ஊழலற்ற நிர்வாகம், போதைப்பொருள் இல்லாத தமிழகம், பெண்கள் மற்றும் இளைஞர் நலன், உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் கட்டமைப்பு மேம்பாடு போன்ற இலக்குகளை எட்ட ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இலக்குகள் நிர்ணயிக்கப்பட உள்ளன. இந்தத் தொடர் கூட்டங்கள் மூலம் தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய சீர்திருத்தங்களும், புதிய மக்கள் நலத்திட்டங்களுக்கான அரசாணைகளும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசு அதிகாரிகள் மத்தியில் இந்த ஜூலை மாத ஆய்வுக்கூட்டங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.