"பெண்களுக்காக ரயிலில் சண்டைப்போட்ட முதல்வர் விஜய்” - நண்பர் சஞ்சீவ் நெகிழ்ச்சி!
தமிழக முதலமைச்சர் விஜய், தனது கல்லூரி காலத்தில் சக மாணவிகளையும், நண்பர்களையும் ரயிலில் ஏற்பட்ட ஒரு பயங்கர மோதலில் இருந்து எப்படி சினிமா பாணியில் காப்பாற்றினார் என்பது குறித்த சுவாரசியமான நினைவலைகளை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
விஜய் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில், தங்களது கல்லூரி நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் இணைந்து ஒரு வெளிமாநிலச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக அவர்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ரயில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 'ஜல்னா' ரயில் நிலையத்திற்கு வந்து நின்றபோது, எதிர்பாராதவிதமாக உருட்டுக்கட்டைகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்த சுமார் 70 பேர் கொண்ட ஒரு கும்பல், இவர்களது ரயில் பெட்டிக்குள் அத்துமீறி நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
ரயில் பெட்டிக்குள் மாணவிகளும் இருந்ததால், அந்த இடமே பயங்கர பதற்றமாகவும், அலறல் சத்தத்துடனும் காணப்பட்டுள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் நண்பர்கள் திகைத்து நின்ற அந்த இக்கட்டான சூழ்நிலையில், ரயிலின் மேல் பெர்த்தில் படுத்திருந்த விஜய், தனது தோழிகளுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து உடனே களத்தில் குதித்துள்ளார்.
திரைப்படங்களில் வருவது போலவே, மேல் பெர்த்தில் இருந்து கீழே பாய்ந்து வந்த விஜய், தங்களை நோக்கித் தாக்க வந்த கும்பலின் முக்கிய நபர் ஒருவரை ஓங்கி மிதித்து நிலைகுலையச் செய்துள்ளார். விஜய்யின் இந்தத் தைரியமான எதிர்த்தாக்குதலைக் கண்டு மிரண்ட அந்த வன்முறைக் கும்பல், மேற்கொண்டு தாக்க பயந்து அங்கிருந்து பின்வாங்கியுள்ளது.
அன்றைய தினம் விஜய் காட்டிய துணிச்சலால் மட்டுமே, தங்களோடு வந்த மாணவிகளும், நண்பர்களும் எந்தவித ஆபத்துமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டதாகச் சஞ்சீவ் நெகிழ்ந்து போய்க் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது இளமைக் காலத்திலேயே பெண்களின் பாதுகாப்பிற்காகத் துணிச்சலுடன் ரயிலில் சண்டையிட்ட இந்த உண்மைச் சம்பவம், அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் மத்தியில் காட்டுத்தீயாய்ப் பரவி வருகிறது.