எரிவாயு நிரப்பும்போது பயங்கரம்... குழாய் வெடித்து கார் ஓட்டுநர் படுகாயம்!
பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள ஒரு எரிவாயு விற்பனை நிலையத்திற்கு வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்திற்கு எரிவாயு நிரப்புவதற்காக வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் காரில் எரிவாயுவை நிரப்ப முயன்றபோது திடீரென எரிவாயு செலுத்தும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயினுள் ஏற்பட்ட அழுத்தத்தை ஊழியர்களால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு ஏற்பட்டுள்ளது.
திடீரென எரிவாயுவின் அழுத்தம் மிக அதிகமாக உயர்ந்ததால் அந்த குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அங்கு நின்று கொண்டிருந்த எரிவாயு நிலைய ஊழியர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய இருவரும் உடல் கருகிப் பலத்த காயமடைந்தனர். இதில் கார் ஓட்டுநர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததைக் கண்டு அங்கு நின்றிருந்த மற்ற வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாகக் காயம் அடைந்த கார் ஓட்டுநரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஓட்டுநரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பார்வையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.