பெரும் சோகம்... நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து... 82 தொழிலாளர்கள் பரிதாப பலி!
சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷான்சி மாகாணத்தின் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் நேற்றிரவு திடீரென பயங்கர வாயு வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது. கின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யூ நிலக்கரி சுரங்கத்தில் இரவு 7.29 மணியளவில் இந்த எதிர்பாராத விபத்து அரங்கேறியுள்ளது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 82 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். நிலக்கரி சுரங்கத்தின் இடிபாடுகளுக்குள் தற்போதும் 9 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதால் அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே சீன துணைப் பிரதமர் ஜாங் குவோசிங் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த விபத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பணியிட பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிபர் வலியுறுத்தியுள்ளார். உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து காரணமாக சீனாவில் தற்போதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.