அசாமில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகி கைது - அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு!

 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்த முயன்ற அந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் காவல்துறைளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான அசுதோஷ் ரங்கா, கட்சி ஆதரவாளர்களைச் சந்திப்பதற்காக கவுகாத்திக்கு வருகை தந்தார். அங்குத் தன்னார்வலர்கள் கூட்டமொன்றை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், காவல்துறை அதற்கு அனுமதி மறுத்ததுடன், கூட்டத்திற்குச் செல்லவிருந்த அசுதோஷ் ரங்காவையும் அவரது ஆதரவாளர்களையும் தடுத்து ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

இந்தச் கைது நடவடிக்கை குறித்துக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தங்களது அமைப்பின் ஜனநாயகக் கூட்டங்களை நடத்தவிடாமல் காவல்துறையினர் தொடர்ந்து தடுப்பதாகவும், கைது செய்யப்பட்டவர்களைத் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே, அசுதோஷ் ரங்காவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியில், தன்னை அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அசாமில் உள்ள பள்ளிகளின் உண்மையான நிலவரங்களை தாங்கள் வெளிப்படுத்தப் போவதைக் கண்டு அரசு அஞ்சுவதால்தான் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.