தேங்காய் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ... பல கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேப்பூர் அருகே உள்ள வெஸ்ட் மாகி பகுதியில் தேங்காய் எண்ணெய் ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் எண்ணெய் தயாரிப்பதற்காக டன் கணக்கில் கொப்பரை தேங்காய்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் திடீரென ஆலையின் ஒரு பகுதியில் இருந்து அடர்ந்த கரும்புகை எழும்பித் தீ மளமளவெனப் பரவியது. எளிதில் தீப்பற்றக்கூடிய கொப்பரை தேங்காய்கள் மற்றும் எண்ணெய் இருந்ததால் தீ வானுயர எழும்பி எரியத் தொடங்கியது.
#WATCH | Kozhikode, Keralam | Fire breaks out at a coconut oil mill in Beypore.
— ANI (@ANI) July 27, 2026
(Source: Fire Rescue Team) pic.twitter.com/csQRVS948V
தீ வேகமாகப் பரவுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கோழிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்தன. தீயணைப்பு வீரர்கள் ஆலைக்குள் புகுந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தின் போது ஆலையில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தக் கோர தீ விபத்தில் ஆலையில் இருந்த அதிநவீன உற்பத்தி எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் பல டன் கொப்பரை தேங்காய்கள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் சாம்பலாகின. இதன் காரணமாகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.