அமெரிக்காவில் காக்னிசன்ட் நிறுவனத்திற்குத் தற்காலிகத் தடை...ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!
இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant) மீதான விசா மோசடிப் புகாரைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அந்நிறுவனத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அடிப்படையில் நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கான 'கிரீன் கார்டு' நடைமுறையில், 'பெர்ம்' (PERM - நிரந்தரத் தொழிலாளர் சான்றளிப்பு நடைமுறை) என்பது மிக முக்கியமான கட்டமாகும். அமெரிக்க ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தகுதியான பணியாளர்கள் உள்ளார்களா என்பதை இந்த நடைமுறை ஆய்வு செய்கிறது.
இந்நிலையில், அமெரிக்க ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் குறைந்த ஊதியப் பிரிவில் காக்னிசன்ட் நிறுவனம் விசா தாக்கல் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில், காக்னிசன்ட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான பெர்ம் தாக்கல் நடவடிக்கைகளை அமெரிக்கத் தொழிலாளர் துறை திடீரென நிறுத்தி வைத்துள்ளது.
இதுதொடர்பாக மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காக்னிசன்ட் நிறுவனம் நேரடியாக விசா மோசடியில் ஈடுபட்டதாகவோ அல்லது குடியேற்றச் சட்டங்களை மீறியதாகவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தீர்ப்பும் வழங்கப்படவில்லை.இந்தத் தடை நீண்டகாலம் நீடித்தால், அந்நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் கிரீன் கார்டு நடைமுறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். குறிப்பாக, அங்கு பணியாற்றும் ஏராளமான இந்தியத் தகவல் தொழில்நுட்ப (IT) ஊழியர்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.