கோவை கேக் மாஸ்டர் கொலையில் திடீர் திருப்பம் - நண்பர்களுடன் சேர்ந்து மகன்களே கொன்ற அதிர்ச்சி!

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறு மற்றும் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பேக்கரி கேக் மாஸ்டர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 சிறுவர்களைப் பிடித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பூவரசன் (30) என்பவர், அங்குள்ள ஒரு பிரபல பேக்கரியில் கேக் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அப்பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, வீட்டில் கடுமையான வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்பட்டுள்ளன.

தாயின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அவரது இரு மகன்களும், பூவரசனைப் பலமுறை எச்சரித்ததாகத் தெரிகிறது. எனினும், பூவரசன் தங்களது எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து தாயுடன் பழகி வந்ததால், அவருக்குக் கடுமையான பாடம் புகட்ட அந்த இரு சிறுவர்களும் திட்டமிட்டுள்ளனர்.

தனி ஆளாகப் பூவரசனை எதிர்கொள்வது கடினம் என்பதால், அந்தப் பெண்ணின் மகன்கள் இருவரும் தாங்கள் ஆன்லைனில் விளையாடும் பிரபல மொபைல் கேமான 'ப்ரீ பயர்' விளையாட்டு குழுவின்நண்பர்களைக் உதவிக்கு அழைத்துள்ளனர். சம்பவத்தன்று, திட்டமிட்டபடி பூவரசனைத் தனியிடத்திற்கு வரவழைத்த அந்த இரு சிறுவர்கள், தங்களது ஆன்லைன் விளையாட்டு நண்பர்களான மேலும் 3 சிறார்களுடன் சேர்ந்து பூவரசனைச் சூழ்ந்து கொண்டுள்ளனர். இரும்புப் பைப் மற்றும் மரக்கட்டைகளால் பூவரசனை அந்த 5 சிறுவர்களும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து விழுந்த பூவரசன், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பூவரசன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது குறித்து உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில், பொள்ளாச்சி நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மொபைல் கேம் நண்பர்களைக் கொண்டு இந்தத் துணிகரக் கொலை அரங்கேற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, கொலையில் தொடர்புடைய அந்தப் பெண்ணின் இரு மகன்கள் உட்பட 5 சிறார்களைப் போலீசார் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கூர்நோக்கு இல்லத்திற்கு  அனுப்பப்பட உள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் உருவான நட்பு இப்படியொரு கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.