போதைப்பொருள் புகாரளித்த மாணவன் படுகொலை - கோவை கல்லூரி நிர்வாகம் விளக்கம்!
கோவையில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் அளித்த கல்லூரி மாணவர் அமுதன் (19) கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த அமுதன் என்ற மாணவர், சக மாணவர்கள் மற்றும் 20 பேர் கொண்ட கும்பலால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கல்லூரியில் சக மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்துக் காவல்துறையிடம் தகவல் தெரிவித்த காரணத்திற்காகவே அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த அமுதனின் மரணத்திற்கு நீதி கேட்டுச் சக மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "ஜூலை 21 அன்று அமுதன் மற்றும் அஜீஷ் ஆகிய இரு மாணவர்களும் விடுதி சமையலரைத் தாக்கியதால், அமுதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜூலை 24-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்."
"மாணவர்கள் தங்களுக்குள் தாக்கிக் கொண்டது குறித்துக் கல்லூரி நிர்வாகத்திற்கு எதுவுமே தெரியாது. ஆகஸ்ட் 10-ம் தேதி அமுதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகே எங்களுக்குத் தகவல் கிடைத்தது."
"மாணவன் அமுதனின் பெற்றோர் சுமத்தும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாகக் கல்லூரியில் எந்தப் புகாரும் வரவில்லை. கைதானவர்களில் சிலர் எங்கள் கல்லூரி மாணவர்கள். சந்தேகத்திற்குரிய 15 மாணவர்களின் பட்டியலைக் காவல்துறையிடம் வழங்கியுள்ளோம்." கல்லூரி நிர்வாகம் இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.