கோவை கிணத்துக்கடவு கொடூரம்... 4 பேர் மீது கொலைவெறித் தாக்குதல்.. 2 பேருக்குத் தலா 8 ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கோழிப்பண்ணையில் நேர்ந்த பயங்கர அரிவாள் வெட்டு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்குக் கோவை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் தலா 8 ஆயுள் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பை வழங்கியுள்ளது.
கோவை மாவட்டக் காவல் துறை மற்றும் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள விவரங்களின்படி, கடந்த 2017-ஆம் ஆண்டு கோவை கிணத்துக்கடவு காவல் எல்லைக்குட்பட்ட ஒரு தனியார் கோழிப்பண்ணையில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியது. அங்குப் பணிபுரிந்து வந்த செந்தில்குமார் மற்றும் சின்னதுரை ஆகிய இரு இளைஞர்கள், பண்ணையில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஓடவிட்டுள்ளனர்.
அப்போது அங்கு வந்த சடையாண்டி, காளிமுத்து, கருப்பு மற்றும் சுந்தர்ராஜன் ஆகிய 4 தொழிலாளர்கள், பாட்டுச் சத்தத்தைக் குறைக்குமாறு சாதாரணமாகக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமாரும் சின்னதுரையும், அந்த 4 பேரையும் சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாகத் திட்டியதுடன், தங்களது கைகளில் வைத்திருந்த அரிவாள்களால் அவர்களைக் கொலை செய்யும் நோக்குடன் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீண்ட சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினர். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸார் கொலை முயற்சி மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், சின்னதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கடந்த 9 ஆண்டுகளாகக் கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன், இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர் என்பதாலும், அவர்கள் மீதான தாக்குதல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வருவதாலும் தண்டனை விபரங்களை நீதிபதி விவேகானந்தன் தனித்தனியாகப் பிரித்து அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமார் மற்றும் சின்னதுரை ஆகிய இருவருக்கும் தலா 4 நபர்களைக் கொலை செய்ய முயன்றதற்காகவும், வன்கொடுமைச் சட்டப் பிரிவுகளின் கீழ் தலா 4 ஆயுள் தண்டனைகள் என ஒவ்வொருவருக்கும் தலா 8 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. இந்தத் தண்டனைகளை இருவரும் தனித்தனியாக இல்லாமல் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தீர்ப்பு விவரங்கள் வாசித்துக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளிகள் இருவரும் கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தனி அறைகளில் அடைக்கப்பட்டனர்.