வீட்டை உடைத்து ரேஷன் அரிசியை தின்ற காட்டு யானை... நள்ளிரவில் பரபரப்பு!
கோவை மாவட்டம் கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வீட்டைச் சேதப்படுத்தி உள்ளே இருந்த ரேஷன் அரிசியைத் தின்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வனப்பகுதியிலிருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. அப்போது பூங்கோடி என்பவரது வீட்டின் அருகே சென்ற யானை, வீட்டின் சுற்றுச்சுவர், இரும்பு கேட் மற்றும் கூரையைச் சேதப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியின் வாசனையை உணர்ந்த யானை, சுவர் மற்றும் ஜன்னல் வழியாகத் தும்பிக்கையை உள்ளே விட்டு அரிசி மூட்டைகளை இழுத்துத் தின்றுள்ளது. யானையின் சத்தத்தைக் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். யானை வீட்டிற்குள் புகுந்து அரிசியை உண்ணும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளனர். சேதமடைந்த வீட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.