தரைமட்டமான கட்டிடம்... உத்தரப்பிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி!
உத்தரப்பிரதேசத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பதாப்பூர் மாவட்டம் மல்வா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மதியம் 5 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. வழக்கம் போலக் குடும்பத்தினர் சமையல் செய்துகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகச் சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
சிலிண்டர் வெடித்ததன் தீவிரத்தால் அந்த வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.