"திமுக ஆட்சியில் 4,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வசூல்... ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும்" - நிர்மல்குமார் கடும் தாக்கு!
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், "திமுக ஆட்சிக் காலத்தில் இடைத்தரகர்களை வைத்து ஆயிரக்கணக்கான பள்ளிகளில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது" எனக் தவெக அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், "திமுக ஆட்சியில் குழந்தைகள் பயிலும் பள்ளிகளுக்குச் சான்றிதழ் வழங்கி, அங்கீகாரம் அளிப்பதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் புரோக்கர்களை வைத்துப் பணத்தை வசூல் செய்த காரணத்தால் தற்போது அவர்கள் மாட்டிக் கொண்டுள்ளார்கள். ஸ்டாலினுக்குத் தெரியாமல் யாருமே பணம் வாங்கி இருக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்திலேயே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதால், திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக அரசியலை விட்டு விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
"கே.என்.நேருவின் தம்பி கொலையாளிகளைக் கூட திமுக ஆட்சியில் கண்டுபிடிக்க முடியவில்லை; செஞ்சி அருகே மாயமான சிறுமியைத் தேடும் பணியில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக ஆட்சியில் தவறுகள் நடந்தால் உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றும் கூறினார்.
இந்தியா முழுவதும் 40,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக மின்பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மாநிலங்களுக்கு மத்திய அரசு இது குறித்து எவ்வித எச்சரிக்கையும் அளிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.