கடலில் குளித்த கல்லூரி பேராசிரியை பலி; உடன் சென்ற ஆசிரியர் அலையில் சிக்கி மாயம்.. தேடும் பணி தீவிரம்!

 

சென்னை எண்ணூர் கடற்கரை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி ஆசிரியை ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருடன் சென்ற மற்றொரு ஆசிரியர் அலையில் சிக்கி மாயமாகி உள்ள நிலையில், தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பழைய வண்ணாரப்பேட்டை ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் கலைச்செல்வி (26) என்பவரின் வீட்டிற்கு சக ஆசிரியர்களான நவீன் மற்றும் கார்த்தி ஆகியோர் மதிய உணவுக்காகச் சென்றுள்ளனர். பின்னர் உணவு முடிந்து கலைச்செல்வியின் தங்கை கவுசல்யா உட்பட நான்கு பேரும் சேர்ந்து தாழங்குப்பம் கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் கலைச்செல்வியும் நவீனும் சிக்கிக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்க முயன்றனர். போராடி மீட்கப்பட்ட கலைச்செல்வி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஆசிரியர் நவீனை எண்ணூர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.